Monday, September 7, 2009

நான் கண்ட "நாய்க்காதல்" !

இடம் : ராமமூர்த்தி நகர் , பெங்களூர் .

நேரம் : காலை 07:38

கிழமை : ஞாயிறு .

அது ஒரு அழகிய அதிகாலை பொழுது. விடுமுறையில் மட்டும் அதிகாலை சீக்கிரமாக எழுந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான். காலையில் எழுந்து ,காலை கடன்களை சிறப்பாக முடித்துவிட்டு எனக்கு தெரிந்த சில உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டின் முன்னே இருந்த அறையில் எனது ரூம் மேட் பார்த்திபன் (என்னை விட மூன்று வயது சிறியவன்) நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அரை மணி நேரம் உடற்பயிற்சி என்பது என் கணக்கு. கடைக்கு சென்று தேநீர் அருந்தலாம் என்று எண்ணி ஜன்னல் வழியே மழை பெய்கிறதா ? என்று வெளியே நோக்கினேன். நல்ல பனிமூட்டம். எதிரே இருப்பது குத்துமதிப்பாக தான் தெரிந்தது. அதனால் சிறிது கண்களை அகலமாக்கி உற்று நோக்கினேன்.பனி மூட்டதிற்கு நடுவே ஏதோ கருப்பு உருவம் அசைவது போல் தோன்றியது. "என்னடா அது ! " என்று என்னுள் ஆர்வம் மிகுந்தது. உற்று நோக்க "அட நம்ம கைப்புள்ள ! டேய் பார்த்தி உங்க ஆளு கைப்புள்ள காலங் காத்தலயே வந்துடாரு ! எப்பவும் இவினிங் தான வருவாரு " என்றவாறே ஜன்னலை மீண்டும் நோக்கினேன். பனிமூட்டம் மெல்ல விலக அங்கு நான் காட்சி என்னுள் கால் பாதத்திலிருந்து கபாலத்தை நோக்கி இரத்தத்தை பீய்ச்சி அடித்தது . சிறிது அதிர்ச்சி. காரணம் கைபுள்ளைக்கு பின்னே இன்னொரு உருவம் .
முதலில் யார் இந்த கைப்புள்ள ? சிறிது முன்னோட்டம் .
நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் மாலைப்பொழுது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் உடம்பெல்லாம் மச்சம் என்று என்னும் அளவு கருப்பு நிறத்தில் ஒரு நாய் படுத்திருந்தது." என்னடா ! புது என்ட்ரியா இருக்கு ! சூ போ போ !! " என்று விரட்டினேன். அதுவும் பயப்படுவது போல பாவலா செய்துவிட்டு சென்றுவிட்டது. இரவு உணவு உண்டுவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். மீண்டும் அதே நாய் , அதே தோரணையில் படுத்திருந்தது என் வீட்டு வாசலில். என்னுடன் இருந்த பார்த்திபனை நோக்கி " என்னடா ! இது இங்கயே செட்டில் ஆயிடும் போலிக்கே !" என்றேன் . "விடுங்கண்ணே ! நாய் தானே அது பாட்டுக்கு இருக்குது " என்றான். "சரி விடு " என்று விட்டுவிட்டேன் . நாட்கள் கடந்தன. மாலை என் வீடு வாசலுக்கு வந்து விடவேண்டியது . காலை எழுந்து எங்கோ சென்று விடவேண்டியது . இதுவே அந்த நாயின் வழக்கம் ஆயிற்று. பார்த்திபனும் நாயுக்கு சிப்ஸ்,பிஸ்கட் என்று உணவு பதார்த்தங்களை கொடுக்க ஆரம்பித்தான். அதற்கு "கைப்புள்ள" என்று பெயரும் சூட்டினான். "தம்பி பார்த்தி ! இதெல்லாம் நல்லதுக்கில்ல ! ஒரு நாள் இந்த நாய் உன்கிட்ட இருந்து கால் கிலோ கறிய கடிச்சிட்டு ஓடப் போகுது பாரு" என்றேன் அடிக்கடி." அதெல்லாம் ஒண்ணுமில்லனே ! பாவம் கைப்புள்ள " என்று அனுதாப அலையை அடித்து விட்டான் பார்த்திபன்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு தெலுங்கு தம்பதியினர் வசித்து வந்தனர்.அவர்கள் வீட்டில் ஒரு அழகிய உடல் முழுவதும் புஸ் புஸ் என்று முடிகளைக் கொண்ட வெள்ளை நாய் ஒன்று வளர்த்து வந்தார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லா குறையை இந்த நாய் தீர்த்து வைத்தது. தினமும் காலை மற்றும் மாலை அந்த நாயினை வாக்கிங் கூட்டிச்செல்வார் அதன் உரிமையாளர். அப்போது "ஹே லிசா ! Able to walk ? ! Legs are paining ?" என்று பெண் குழந்தையை கொஞ்சுவது போல் பேசிப் பாதுகாப்பார்.ஒருமுறை அவ்வாறு வெளியே வாக்கிங் வந்த போது என் வாசலில் இருந்த கைப்புள்ள லிசாவை நோக்கி பலமாக குரைக்க ஆரம்பித்தது. பதிலுக்கு லிசாவும் எகிற ஆரம்பித்தது . அதன் உரிமையாளர் அதன் சங்கிலியை இறுகப் பற்றிக் கொண்டு " ஹே லிசா !! காம் டௌன் !! காம் டௌன் !" என்று சாந்தப்படுத்தினார்.இரு நாய்களும் இந்திய ,பாகிஸ்தான் இராணுவம் போல ஒரு போருக்கான பிரம்மையை உண்டாக்கிவிட்டு அமைதியாகிவிட்டன. இதனை கண்ட நான் "டேய் பார்த்தி! இந்த கைப்புள்ளயால நமக்கு ஒருநாள் பூச கெடைக்கப்போகுது பாரு !" என்றேன் . நாட்கள் உருண்டோடின. தினமும் இரு நாய்களும் சந்திக்கும் போதெல்லாம் எகிற ஆரம்பித்தது . இரு வீட்டாரும் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
மேற்குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் , நான் கைபுள்ளயின் பின்னே கண்ட உருவம் "லிசா" .ஆம் ! அங்கு நமது கைப்புள்ள ஆயர்கலை 64கையும் லிசாவுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். எப்படிடா இந்த லிசா வெளியே வந்துச்சு " என்று எண்ணிக் கொண்டிருந்தேன். "டேய் பார்த்தி !இங்க வந்து பாருடா ! இன்னைக்கு சனியன் சடைபோட ஆரம்பிச்சிருச்சி !" என்று அலறினேன். அவன் "என்னனே ஆச்சி !" என்று படுக்கையை விட்டு ஓடிவந்தான் . இருவரும் கதவை திறந்து வெளியே வர , அதே நேரம் பக்கத்துக்கு வீட்டு ஆன்டி யும் வெளியே வந்து பார்க்க உடனே "ஏண்டி ! பயடகு வச்சி சூடு எமவுதுந்தோ !!" என்று அலறி தான் கணவரை அழைக்க அவர் பதறி அடித்து வெளியே வந்து கைப்புள்ளையும் ,லிசாவும் புணர்ந்து கொண்டிருப்பதை கண்டு "தொங்கனா குக்கா!!" என்று வீட்டிற்ககுள் கோபமாக சென்றார். அவர் என்ன செய்ய போகிறாரோ என்ற பதட்டத்தில் அவரின் வீட்டு வாசலை பார்த்துகொண்டிருக்க வந்தார் வெளியே ஒரு பெரிய இரும்புக் கம்பியோடு. எனக்கு இதயம் வேகமாக துடிக்கதொடங்கியது . இரு நாய்களுக்கும் அருகே வேகமாகச் சென்று தான் கொண்டு வந்த கம்பியால் கைப்புள்ளயின் பின்புற இடது காலில் "டங் !!" என்று அடி விட்டார் . பார்த்தி முகத்தை திருப்பிக்கொண்டான்.எனக்கு பிடரியில் "டங்!!" என்று அடித்ததை போல் ஒரு உணர்வு. அடிப்பட்ட கைப்புள்ள "ஆங் ! ஆங்!!" என்று குரைத்து கொண்டு லிசாவிடம் இருந்து விலகி வில்லில் இருந்து விடுப்பட்ட நாணை போல காற்றைக் கிழித்துக்கொண்டு அலறியடித்து கொண்டு ஓடியது. அப்படியே தெருமுனை நோக்கி ஓடி மறைத்தது. லிசாவின் உரிமையாளர் எங்களை முறைத்துக்கொண்டு , லிசாவை இழுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றார். எங்கள் வீட்டில் நிஷப்தம். நானும் , பார்த்திபனும் அமைதியாக இருந்தோம். கைபுள்ளைக்கு விழுந்த அடி எங்களுக்கு விழுந்த அடிபோல தோன்றியது. அவனை சிறிது உற்சாக படுத்த எண்ணி "சரிடா ! பார்த்தி சாப்ட போவோமா !" என்றேன். "இல்லனே! எனக்கு ஒன்னும் வேண்டாம் ! நீங்க வென போயிட்டு வாங்க" என்றான். "என்னடா! கைப்புள்ள அடிவாங்கின பீலிங்க்ஸ்சா!!? அது அடிவாங்குனதுக்கு அதன் லவ்வர் லிசா நாய்கூட இவளோ பீல் பண்ணாது ! நீ விட்டா கண்ணீரே விடுவ போல?" என்று சொல்லி சிரித்தேன். கோபங்கொண்ட பார்த்திபன் "அண்ணே ! ரொம்ப நக்கல் பண்ணாதீங்க ! உங்களுக்கு வேணும்னா போய் சாப்டுட்டு வாங்க !" என்றான். அவனது கோபத்தை சற்றும் எதிர்பார்க்காத நான் " நீ வேணும்னா பாரு ! வாங்கின அடிக்கு அந்த கைப்புள்ள இந்த பக்கம் எட்டியே பார்க்காது. கெட்டதிலையும் ஒரு நல்லது "என்றேன் . பார்த்திபன் அமைதிகாத்தான். இரண்டு நாள் கழிந்தது. கைப்புள்ளயை வீட்டின் முன் காணவில்லை. பார்த்தியை நோக்கி "என்னப்பா ! சொன்னனா இல்லையா கைப்புள்ள இந்நேரத்துக்கு கசாப்பு ஆயிருக்கும்" என்றேன். பார்த்தியிடமிருந்து மீண்டும் அமைதியே பதில்.
மூன்றாவது நாள் மாலை நானும்,பார்த்தியும் தேநீர் அருந்த வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். தெருவில் தனது ஒரு காலைத் தூக்கிக்கொண்டு ,மூன்று கால்களால் நொண்டி நொண்டி வந்துகொண்டிருந்தது கைப்புள்ள. அதனைக் கண்ட பார்த்திபனுக்கு முகம் மற்றும் அகமலர்ச்சி. எனக்கோ அதிர்ச்சி. மெதுவாக வந்து பார்த்திபனின் காலை நக்கியது கைப்புள்ள. பார்த்திபன் அதன் அருகே அமர்ந்து அதன் அடிபட்ட காலை தடவிகொடுத்தான்."பாத்தீங்களா ! பெருசா ஏதோ சொன்னீங்க ! இப்ப என்ன சொல்றீங்க!" என்றான். இம்முறை என்னிடமிருந்து அமைதி பதிலாக. நானும் பார்த்திபனின் அருகில் அமர்ந்து கொண்டு கைபுள்ளையை தடவிகொடுதேன். மீண்டும் எங்கள் வீட்டில் கைபுள்ளயின் விஜயம்.
சரியாக 66 நாட்கள் கழித்து. நான் வீட்டு வாடகை கொடுப்பதற்க்காக வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது பக்கத்துக்கு வீட்டு தெலுங்கு ஆன்டியும் வாடகை கொடுக்க நின்றுகொண்டிருந்தார். நான் அவரை கண்டும் காணாதது போல் நின்றுகொண்டிருந்தேன் ."ஹாய் " என்றார் ஆன்டி. நானும் "ஹலோ ! ஆன்டி !" என்றேன். " ஐ வான்ட் டு டெல் யு ஒன் நியூஸ் !" என்றார். "எஸ் ஆன்டி " என்றேன்."லிசா கேவ் பிரத் டு த்ரீ பப்பீஸ்" என்றார் . எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி." இஸ் இட் !! தட்ஸ் எ நைஸ் நியூஸ் ஆன்டி " என்றேன். இருவரும் விடை பெற்றுக்கொண்டு சென்றோம். நான் ஓடிச் சென்று பார்த்தியிடம் "டேய் ! பார்த்தி ! நம்ம கைப்புள்ள அப்பா ஆயிட்டார்டா !" என்றேன். பார்த்தி "ஆகா !! அப்படியா !! எத்தன குட்டி " என்றான் . " மூணு பா மூணு !! என்றேன் . அவன் " சூபெர் சூபெர் !!" என்று கூவினான்.வெளியே படுத்திருந்த கைபுள்ளயின் அருகில் சென்று "அடேய் ! கைப்புள்ள ! காலை கடனை முடிக்க வந்த ஒரு கண்ணிபொன்ன இப்படி கற்பமாக்கி மூணு குழந்தைய குடுதுட்டயே !! ஆனாலும் அடி வாங்கிட்டு இங்கயே வந்துருக்கே பாரு ! நீ பெரியா ஆளு தான்" என்றேன். கைப்புள்ள பாவமாக என்னை நோக்கியது. "அது திரும்ப வந்துருக்குனா அதுக்கு காரணம் அது லிசா மேல உள்ள லவ்வுனா !! லவ்வு !!" என்றான் பார்த்திபன். "அட அது திரும்ப வந்ததுக்கு காரணம் லிசா மேல உள்ள லவ்வு இல்ல டா ! உன் மேல உள்ள நன்றி ! அது தான்டா லவ்வு " என்றேன். மெல்ல புன்னகைத்தான் பார்த்திபன். ஆம் !! எனக்குத் தோன்றிய உண்மையான உணர்வு அது.
இரண்டு வாரம் கழித்து லிசாவின் உரிமையாளர் லிசா ,மற்றும் மூன்று குட்டிகளுடன் வாக்கிங் வந்தார். அக்காட்சியினை கண்ட எங்களுக்கு மகிழ்ச்சி. இம்முறை லிசா கைபுள்ளையை நோக்கி குரைக்க ! கைப்புள்ள லிசாவை நோக்கி எகிற! லிசாவின் உரிமையாளர் "லிசா! காம் டௌன் !! காம் டௌன் !!" என்று திமிர. "அட மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கயா!!" நானும் பார்த்தியும் மகிழ்ந்தோம் குதூகலத்தில் . Download As PDF