Wednesday, November 25, 2009

புனிதமலம் ( The Holy Shit)

இடம் : நாகர்கோயில் .
கிழமை : ஞாயிறு
நேரம் : காலை 9.45

"விர்ர் விர்ர் " என்ற அதிர்வு எனது ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்க, பதறி எழுந்து எனது கைபேசியை தேடினேன். தலையணைக்கு அடியில் கிடைத்த கைபேசியில் எனது நண்பன் வசந்திடமிருந்து அழைப்பு.
"என்னடா ! ஞாயிற்றுகிழமை காலையிலயே ?" என்றேன் .
"டேய் ! மணி 10 ! என்னைக்காவது சீக்கிரம் எழுந்துருகியாடா " என்றான் .
"எப்பா ! கருத்து கந்தசாமி எனக்கு செம தூக்கம் வருது ! என்ன மேட்டர்னு சீக்கிரம் சொல்லு " என்றேன்.
"மச்சி ! சொல்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு " என்றான்.
"என்ன கோவபடுத்தாத! சீக்கிரம் சொல்லு !! நா செகண்ட் இன்னிங்க்ஸ் தூக்கம் ஆரம்பிக்கணும் " என்றேன் .
"இல்ல ! நேத்து நைட் வருணா போன் பண்ணா! " என்று பம்மினான்.
"அந்த கூத்துதான் தினமும் நடக்குதே ! அதுல என்ன ஸ்பெஷல் " என்று அதட்டினேன்.
"நேத்து எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டா டா" என்றான். என்னிடம் ஒரு கோபம் கலந்த அமைதி.
" என்னடா ஒன்னும் சொல்லமாட்ற" என்றான் . அறையின் வெளியில் இருந்து எனது அம்மா " பிரவின் ! எந்த்ரிபா மணி 10 என்று அழைக்க " சரி ! நாளைக்கு மெட்ராஸ் வந்துருவேன் நேர்ல பேசிக்கலாம் இப்போ அம்மா கூப்பிடுறா" என்றேன். " என்மேல கோவம் இல்லேல ?" என்று வினவ "நேர்ல பேசலாம்" என்று சொல்லிவிட்டு கைபேசியை வைத்துவிட்டேன்.
வசந்தும் , நானும் trouser போடாத காலத்திலிருந்தே நண்பர்கள். படிப்பில் கெட்டிக்காரன். தமிழ் கவிதைகள் எழுதுவதில் வல்லவன் . மிக பொறுமைசாலி. அளவுக்கதிகமான தன்னடக்கம் கொண்டவன். அவனது தந்தை அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார். அவரது தாய் ஒரு பொதுநூலகத்தில் வேலை பார்த்துதான் வசந்தைப் படிக்கவைத்தார். இப்போது வசந்த் ஒரு சாப்ட்வேர் Engineer . நானும் அவனும் ஒரே வீட்டில் சென்னையில் தங்கி இருந்தோம் . திங்கள் காலை 5 .30 சென்னையில் வீட்டை அடைந்தேன் . வசந்த் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவனது கைக்குள் தனது கைபேசியை இறுகப்பற்றிகொண்டிருந்தான். நானும் எனது பாயை விரித்து தூங்கினேன் . காலையில் சூரிய ஒளி ஜன்னல் வழியே சுளீர் என்று அடிக்க , கண்ணை மெல்ல திறந்தேன் , எதிரே வசந்த் குளித்து அலுவலகத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். கண்ணாடியின் முன் ஒரு 5 நிமிடநேரம் நின்று தலை வாரியவண்ணம் தனது அழகை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தான்." எப்போடா வந்த ?" என்றான் என்னிடம். " 5 .30 " என்று ஒற்றைவார்த்தை பதில். திடீரென்று அவனது கைபேசி அலற " மச்சி ! cab வந்துருச்சி !! நைட் பாப்போம்" என்று சொல்லிகொண்டே தனது கம்பெனி ID கார்டை தாலியாக தொங்கவிட்டுக்கொண்டு கதவை அடைத்துக்கொண்டு வெளியே ஓடினான். நான் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு நன்றாக தூங்கினேன்.
மாலை மணி 7 .45 , நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி ஆடைகளை மாற்றிக்கொண்டு தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தேநீர் அருந்த வெளியே சென்றேன். வீட்டின் முன்னே cab வந்து நின்றது. வசந்த் கைபேசியை காதில் வைத்தவாறே வெளியே வந்தான். " morning 8 .30 க்கு வந்திருங்கணா " என்று cab ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு ,என்னை நோக்கி "எங்கடா போறே?" என்றான். " டீ குடிக்க !! நீ வரியா ?" என்றேன். " இல்லடா tiredடா இருக்கு ! நீ போ ! வரும்போது ஒரு 7 up மட்டும் வாங்கிட்டு வா " என்று கூறிவிட்டு மீண்டும் கைபேசியை காதில் வைத்துக்கொண்டு தொடர்பைத் தொடர்ந்தான். சிறிது கடுப்பானேன், காட்டிக்கொள்ளவில்லை. 7 up டன் வீட்டிற்கு வந்தேன். வசந்த் கைபேசியோடே இருந்தான். அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தேன். ஒருவாறாக 9 மணி அளவில் கைபேசியை வைத்துவிட்டு வந்தான் எனது அருகில். " அப்புறம் சொல்றா ! வீட்ல எப்படி இருக்காங்க ?" எங்க வீட்டுக்கு போனியா ? அம்மா எப்படி இருக்குது " என்றான். " எல்லாரும் நல்ல தான் இருக்காங்க " என்று ஒரு மிதப்புடன் பதில் அளித்தேன். அப்புறம் ஊர்ல இருந்து சிப்ஸ் கொண்டு வந்தியா? " என்றான். " பேக்ல இருக்கு பாரு " என்று சுட்டிக் காட்டினேன். ஓடிப் போய் இரண்டு சிப்ஸ் மட்டும் வாயிலே போட்டுக் கொண்டு "அப்புறம் சாப்பிடலாம்" என்றான். " சரி ! சாப்ட போலாமா " என்றேன். இருவரும் உணவு உண்ண சென்றோம் அருகில் இருந்த உணவகத்திற்கு. " டேய் ! டின்னெர் முடிச்சிட்டு வந்து பாம்பு அட்டை (snake and dice ) ஒரு கேம் விளையாடுவோம் " என்றேன். வசந்தின் முகத்தில் சிறிது பதற்றம் ."என்ன? " என்றேன்." இல்ல ! நீ பாம்பு அட்டை விளையாட கூப்ட்ட ஏதோ மேட்டர் இருக்குன்னு அர்த்தம் அதான் யோசிக்கிறேன்" என்றான் . " ரொம்ப யோசிக்காத சீக்கிரம் சாப்டு முடி " என்றேன். வீட்டை அடைந்தோம். சிறிது கிளர்ச்சி அடைந்தவனாய் "மச்சி ! வீக் எண்டுல ஒரு பாட்டு கேட்டேன் ! nice மியூசிக் . நான் போன்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன் கேளு " என்று எனது காதில் சொருகினான்." சங்கத்தில் பாட கவிதை அங்கத்தில் யார் தந்தது " என்று ஒலிக்க " டேய் !" என்றேன். " ரொமாண்டிக் சாங் இருந்தாலும் மியூசிக் நல்ல இருக்குல " என்றான் வசந்த். " மவனே ! நீ என் இப்போல ரொமாண்டிக் song கேக்குறேன்னு எங்களுக்கும் புரியும் " என்று தலையாட்டினேன். " ஏன்டா ! எப்ப பாரு சாமியார் மாறி பேசுறே,சொல்லபோன நடிக்கிறே " என்று சொல்லி சிரித்தான் வசந்த். " ஆமாடா ! நான் நடிக்கிறேன் தான் ! இந்த வேஷம் எனக்கு பிடிச்சிருக்கு ! இது தான் எனக்கு வேலியும் கூட " என்றேன் . அவன் பதிலேதும் பேசவில்லை . அந்த அனல்பறந்த சூழ்நிலையை சிறிது மாற்ற எண்ணி " சரி வா ! கேம் ஸ்டார்ட் பண்ணுவோம் " என்று சொல்லி அதற்குரிய வேலைகளில் ஈடுபட்டேன். வசந்த் மீண்டும் அன்பை பொழிந்து கொண்டிருந்தான். " டேய் ! மணி 10 சீக்கிரம் டா " என்றேன் . "ஓகே ! குட் நைட் வருணா " என்று சொல்லி போனை வைத்துவிட்டு எனது எதிர்பக்கம் வந்தமர்ந்தான். "எனக்கு சிவப்பு காய் ,உனக்கு ?" என்றேன் . " எனக்கு "எல்லோ" my லக்கி கலர் " என்றான். "சரி கட்டையை உருட்டு ராஜா" என்றேன். அவன் கட்டையை சகுனி தோரணையில் உருட்ட " டேய் ! ஒரு சின்ன கண்டிஷன் " என்றேன். " என்ன ?" என்று புருவத்தை உயர்த்தினான். " கேம்க்கு நடுவில போன் வந்துச்சின்னு போனே செம காண்டாயுடுவேன் " என்று சொல்ல " அதெல்லாம் நாங்க சொல்லியாச்சி ! மூடிட்டு விளையாடுறையா? " என்று கட்டையை உருட்ட விழுந்தது "ஆறு ". " ஆரம்பமே சிக்ஸர் மச்சி" என்று கலரை தூக்கிவிட்டு மஞ்சள் காயை நகர்த்தினான். நான் காயை உருட்ட விழுந்தது " மூன்று ". பரமபத விளையாட்டின் உள்நோக்கத்தை அவனிடம் கேட்டேன். " டேய் ! ஏதோ ப்ரொபோஸ்ன்னு சொன்னியே ? என்ன மேட்டர் ? " என்றேன் . " அதான் ! சொன்னேனே " வருணா" "என்று கூறிக்கொண்டே உருட்ட விழுந்தது " நான்கு " காய் நகர்ந்தது ,உரையாடலும் தான். "ஹ்ம்ம் ! ஏதோ friend kindunnu பெருசா சொன்னே ! எனக்கு அப்போவே தெரியும்டா !" என்றேன். " டேய் ! அவதானடா ப்ரொபோஸ் பண்ணா ! நா friendடா தான பழகினே " என்றான் பாவமாய். " சரி! நீ என்ன சொன்னே வருணாகிட்ட " என்று கேட்டேன். " ஒரு ரெண்டு நாள் யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்கிட்ட discuss பண்ணிட்டு சொல்லலாம்னு தான்" என்று வார்த்தைகளை விழுங்கினான். " அம்மாகிட்ட சொன்னியா ?" என்று வினவ " எல்லாம் உன் இஷ்டம்னு சொல்லிடாங்கடா " என்று சொல்லிக்கொண்டே காயை வீச விழுந்தது "மூன்று" ஹயா ! ஏணி மச்சி !! சர் !! சர் !!" என்று ஓசை எழுப்பியவாறே 30 கட்டங்கள் கடந்தான். ஆட்டம் சிறிது சூடுபிடித்தது. "சரி ! இப்ப நீ என்ன சொல்லப்போற ? உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா ? " என்றேன். " தெரியலடா" என்றான். "மேட்டர் ரொம்ப சிம்பிள் அப்ப உனக்கும் அவள பிடிச்சிருக்கு " என்று கூற " இல்ல மச்சி ! உனக்கு பிடிக்கலேன்னா விட்டுவிடலாம் " என்றான். அவனை நோக்கி "அப்ப சரி ! தயவுசெய்து விட்ரு" என்றேன் . இதனை சற்றும் எதிர்பார்க்காத வசந்த் " ரீசன் என்னடா ?" என்றான். " நம்ம friend தாஸ் " என்று சொல்லிகொண்டே காயை வீச விழுந்தது "நான்கு".
வசந்த் கடுங்கோபம் கொண்டான். "அது எப்பவோ நடந்த மேட்டர்டா " என்றான்."அதுக்கு ?" என்றேன். " டேய் ! இப்போ சந்திரனுக்கு ராக்கெட் விடுறானுங்க , அது ஒரு தடவே பெயில் ஆயுடுசினா மறுபடியும் விடவே மாட்டாங்களா என்ன ?" என்று கேட்க, சிறிது கிளர்ச்சியுற்ற நான் "எப்ப சாமி !! லவ்வும் , ராக்கெட் சயின்ஸ்சும் ஒண்ணாடா ? பெரிய அப்துல் கலாம் அண்ணன் பையன் மாதிரி பேசுறே " என்று கேட்க , " சிறிது அமைதியானான் வசந்த். "இல்ல மச்சி ! என் விஷயத்துல அப்படி ஒன்னும் பெயில் ஆகாதுன்னு நம்புறேன் " என்றான். அவனது கண்களிலும்,வார்த்தையிலும் ஒரு அழுத்தம் தெரிந்தது. " வருணாவை உனக்கு எவளோ நாள் தெரியும் " என்று கேட்க " 1 இயர் " என்றான். " ஹ்ம்ம்!! ஓகே !! உனக்கு பிடிச்சிருக்கு . ஒரு சின்ன கேம் " என்று கூறி பரமபதத்தை மூடினேன். " டேய் ! வழக்கம்போல எதுவும் விளையாடாத மச்சி ! வாழ்க்கை சமாசாரம் " என்று பதறினான்."ரொம்ப பயபடாத ! நாளைக்குபோய் வருணாகிட்ட சொல்லு "எனக்கு உன்ன பிடிக்கிறது ஓகே ! பட் உங்க parents க்கு என்ன பிடிக்கணும் ,அதனால முதல்ல உன் parents கிட்ட சொல்லு ! அப்புறம் பார்க்கலாம்னு" சொல்லு , அவ என்ன சொல்றான்னு பாரு ! கண்டிப்பா பம்முவா !! " என்று கூறிக்கொண்டே தலையாட்டினேன். சிறிது அதிர்ச்சியடைந்த வசந்த் " டேய் ! என்னடா சொல்றே இவளோ சீக்கிரமாவா? " என்றான். " அப்ப எதுக்குடா லவ் பண்றீங்க ! நல்ல தோள் மேல கைய போட்டுக்கிட்டு ஊர்சுத்தவா ?" என்று கேட்க , மிகவும் களைத்துப்போனவனாய் " மச்சி ! எனக்கு என்னமோ பிரச்னை வரும்போல தோணுது " என்றான். " பிரச்னை வரணும் அதுக்கு தான்! நீ பொய் சொல்லு முதல்ல ! அப்புறம் பாரு அவ reactionன !" என்று பரமபதத்தின் மூலம் அவனது உணர்ச்சிகளை பதம் பார்த்தேன் .மணி 11 .30 . " டேய் ! தூங்குவோம்டா " இருள் சூழ்ந்தது.
மறுநாள் அலுவலகத்திலிருந்து சிறிது களைப்புடன் வந்தான் வசந்த். "என்னடா ! ஓவர் வொர்க்கா? trouser கிழிஞ்ச மாதிரி தெரியுது " என்று சிரித்தேன். பதிலேதும் சொல்லாமல் அவனது வேலைகளை செய்து கொண்டிருந்தான். ஓகே ! நம்ம கேள்வி கணை ஏதோ சித்து விளையாட்டு செய்திருக்கிறது " என்று மனதில் நினைத்துக்கொண்டு "என்னடா ! என்ன reaction ? " என்று கேட்க , கோபம் கொண்டவனாய் அலுவலகத்தில் நடந்ததை விவரித்தான். "நான் அவளிடம் நீ சொன்ன கேள்வியைக் கேட்க, இந்த கேள்வியை நீயா கேட்குறையா இல்ல வேற யாராவது? யாராவது என்ன ? பிரவின் கேட்க சொன்னனா ? " என்றாள். நான் ஒண்ணும் சொல்லாம நின்னேன்டா , அப்புறம் ஒண்ணும் சொல்லாம போய்ட்டாடா " என்றான் வசந்த். நான் வயிறு வலிக்கச் சிரித்தேன். " டேய் ! சிரிக்காதடா" எச்சரித்தான் வசந்த். " வேற என்ன ராஜ பண்ண சொல்றே ! இப்போ backtrack அடிகிறா பாத்தியா இதுக்குதான் சொன்னேன்,சரி விடு என்ன நடக்குதுன்னு பாப்போம்" என்றேன். இரண்டு நாட்களுக்கு வசந்துக்கு வருணாவிடமிருந்து எந்த போனும் வரவில்லை. வசந்த் மிகுந்த கவலை கொண்டான். " என்னடா ஆபீஸ்லயாவது பாத்தியா ? " என்று கேட்க ," ஆபீஸ்ல பேசுறதே இல்லடா !" என்று கூறிக்கொண்டே படுக்கையை விரித்து படுத்தான். "விட்றா மச்சி ! அடுத்த ஜக்கெட்க்கு பிராக்கெட் போடு ! சப்ப மேட்டர் " என்றேன். வசந்திடம் மௌனமே பதில்.
சரியாக நாலாவது நாள் , இரவு வசந்திற்கு ஒரு அழைப்பு , அழைப்பைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. " ஆங் ! சொல்லு வருணா ! ஆங் ! அப்படியா ! ஓகே ! நாளைக்கு ஆபீஸ்ல detail ல பேசலாம் ஓகே குட் நைட் " என்றான். ஏதோ கற்பனை செய்தவாறு அவனைப் பார்த்து கொண்டிருக்க ஓடி வந்து என் அருகில் அமர்ந்தான். அவனது கைகள் நடுங்கின. " என்னடா ! ஓவர் excitation ன இருக்கு " என்றேன். " அவ ! அவங்க அப்பகிட்ட சொல்லிட்டாளாம்! இந்த வீக் end வீட்டுக்கு வரச் சொன்னாராம் !" என்றவாறே பதற்றத்துடன் சிரித்தான். சிறிது அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் " ஹ்ம்ம் !! குட் டா ! உன் வருணா மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல போல ! தைரியமா சொல்லிட்டாளே ! வீக் endல போய் பாரு " என்றேன். அவனது கைகளில் நடுக்கம் அதிகரிக்க எனது கையைப் பற்றிக்கொண்டு " நீயும் வாடா!" என்றான். " ஹ்ம்ம் !! ஒரு ரெண்டு நாள் யோசிச்சி சொல்லட்டா ? " என்று சிரித்தேன். " டேய் ! மவனே !" என்று எனது கழுத்தை பற்ற "சரி ! ஓகே ! போவோம் !" என்றேன் .
ஞாயிற்றுகிழமை அவளது வீட்டிற்கு சென்றோம் . ஒரு apartmentல் இருந்தது அவள் வீடு . வீட்டின் வெளியே நின்றவாறே வருணாவை கைபேசியில் அழைத்தான் வசந்த். உள்ளே ஒரு கைபேசியில் "தும்பி வா தும்ப பூ " என்று மலையாள பாடல் ரிங் டோன் ஒலிக்க , வசந்தை முறைத்தேன். வேறு ஒன்றும் இல்லை அந்த பாடல் " சங்கத்தில் பாடாத கவிதை " என்ற வசந்தின் ரிங் tone னின் மலையாள version . வசந்த் விஷயத்தை புரிந்தவனாய் என்னை நோக்கி வழிந்து "ரெண்டு பேருக்கும் ஒரு tasteடா " என்றான். " மொக்க பசங்களா ! உங்கள திருத்தவே முடியாதுடா " என்று தலையில் அடித்துக் கொண்டேன் . வருணா வெளியே வந்து " வா வசந்த் !! வாங்க பிரவின் " என்று வரவேற்றாள். அவளது தந்தையும்,தாயும் எங்களை வரவேற்று பேசத் தொடங்கினார். 45 நிமிட நேர்காணலுக்கு பின் முடிவு வசந்திற்கு சாதகமாகவே முடிந்தது. வருணாவின் தந்தை ஆறு மாதம் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றார் . வருணாவும்,வசந்தும் கண்களாலேயே பேசிக்கொண்டனர். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். "என்னடா ! சந்தோசமா ? பாம்பு அட்டை விளையாட்டு மாதிரி சர் சர் னு மேல போற போல " என்றேன் . எனது கையை பற்றிக்கொண்டு " தேங்க்ஸ் மச்சி !" என்றான். " அட விடுடா !" சிரித்தேன் நான்.
ஆறு மாதம் ! இருவரும் உருகி உருகி காதலித்தனர். வசந்தின் அம்மாவிற்கு மகிழ்ச்சி. வருணா அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு செயலிலும் ஊட்டினாள். ஆறு மாதம் கழித்து வசந்தின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது . வார இறுதியில் அவர்கள் வீடிற்கு சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றானது . திருமணமான ஒரு மாதம் கழித்து வசந்திற்கு onsite வாய்ப்பு வந்தது. " டேய் ! மச்சி ! 6 months onsite ! வருணாகிட்ட சொன்னா வேண்டாம்னு சொல்லுவானு நினைக்கிறேன். இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு " என்றான்." நீ என்ன சொல்றே ?" என்றேன் . " போனா கொஞ்சம் காசு பாக்கலாம் . முடிஞ்சா வருணாவையும் கூட்டிட்டு போய்டலாம் ஒரு மாசத்துல " என்றான். "அப்போ அவகிட்ட உனக்கு போக விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்னு சொல்லு " என்றேன் . " என்னடா மீண்டும் reverse psychology ?" என்றான் . " போய் சொல்லிப்பாருடா " என்றேன் சிரித்துக்கொண்டே. நினைத்தது நடந்தது .
ஒரு மாதம் கழித்து வசந்த் onsite செல்ல தயாரானான். நான் அவன் வீட்டிற்கு சென்று உதவிக்கொண்டிருந்தேன் . " என்னடா ! வருணா எப்போ ஏர்போர்ட் வருவா ?" என்று கேட்டேன். " இப்போ விழுப்புரம் பக்கத்தில ஏதோ அவங்க மாமா வீடு இருக்கு போல அங்க ஏதோ function அத முடிச்சிட்டு டிரெக்டா ஏர்போர்ட் வந்துருவா ! வந்துட்டு மறுபடியும் விழுப்புரம் போயுடுறா!" என்றான் வசந்த் . " ஓகே ! மச்சி பாப்போம் . எத்தன மணிக்கு flight ?" என்று கேட்க , " காலையில 7 .45 க்குடா வந்துருவேல !" என்றான் . " பாப்போம் !ஒரு வேள தூங்கிட்டேனா வர முடியாது " என்றேன். " எப்ப பாரு தூக்கம் தான ! அப்போ வர மாட்டே தெரியும் " என்றான். அவனிடம் விடைபெற்றுக்கொண்டு எனது வீட்டிற்கு சென்றேன்.
காலை மணி 5 .30 வருணாவின் கைபேசியில் இருந்து அழைப்பு. " ஹலோ " என்றேன். " என்ன சார் ! friend onsite போறாரு ! நீங்க வரமாடீங்க " என்றாள். " இல்ல ! ரொம்ப early flight " என்றேன். வசந்த் பேசினான் ." டேய் ! immigration செக் பாயிண்ட் உள்ள போறேன்டா ! அம்மாவும் இங்க தான் இருக்காங்க" என்றான். " அம்மா எப்போடா வந்தாங்க " என்றேன். " இங்க ஒரு மாமா வீடு இருக்குன்னு சொல்லிருக்கேன்ல அங்க இருந்தாங்க ! ஏர்போர்ட்ல இருந்து அங்க போய் தான் தங்குவாங்க முடிஞ்ச போய் பாரு " என்றான். " கண்டிப்பாடா ! ஆல் தி பெஸ்ட் " என்று சொல்லிக் கொண்டு தொடர்பைத் துண்டித்தேன்.
காலை மணி 9 .45 எனது கைபேசிக்கு மீண்டும் வருணாவிடம் இருந்து அழைப்பு. " சொல்லுங்க வருணா !" என்றேன் . " ஹலோ ! சார் ! நாங்க போலீஸ் பேசுறோம் " என்றது எதிர்ப்பக்கக்குரல். சிறிது குழப்பத்துடன் படுக்கையை விட்டு பாதி எழுந்து " ஆங் ! சொல்லுங்க சார் ! " என்றேன் . " இது யாரோட நம்பர்ங்க? நீங்க யாரு " என்று கேட்டார் . " சார் ! இது என் friend's wife வருணாவோட நம்பர் " என்னாச்சு சார் " என்று கேட்க மிகுந்த பதற்றதுடன் " சாரி சார் ! இந்த பொண்ணு அப்புறம் அவங்களோட வந்தவங்க இங்க செங்கல்பட்டு பக்கத்தில நடந்த ஒரு accidentல spotல இறந்துட்டாங்க !" என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சி ." என்ன சார் சொல்றீங்க ! கார் நம்பர் என்ன ?" என்றேன். அவர் கூற ஆம் அது வருணாவின் கார் நம்பர் தான் . எனக்குள் பதற்றம் . " கடைசியா உங்களுக்கு தான் போன் பண்ணிருக்காங்க அதான் போன் பண்ணினோம் ! நீங்க வந்து ஒரு தடவ confirm பண்ண முடியுமா " என்றார். "சரி சார் ! நான் வரேன்" என்று கூறி அவரிடம் இடம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி விரைந்தேன் . போகும் வழியில் பலவாறான எண்ணங்கள் . சந்தோசமாக போய்க் கொண்டிருப்பானே வசந்த் ! அவனிடம் எப்படி சொல்வது . வருணா என்னிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த தருணங்கள் கண்முன்னே வந்து என்னை கலங்கடித்தது. ஏர்போர்ட்டில் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனை பார்த்து விஷயத்தை சொன்னேன் . அவன் பார்த்துக் கொள்வதாய் உறுதியளிக்க செங்கல்பட்டு நோக்கி விரைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி கோரத்தின் உச்சம் !! அந்த காரில் பயணம் செய்த நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் தலையில்லா முண்டங்களாய் கிடந்தனர் . வருணா,அவளது அம்மா,அப்பா மற்றும் ஓட்டுனர். எனக்குப் மிகவும் பிடித்த சிவப்பு நிறம் அன்று என்னை அச்சுறுத்தியது . கண்களால் காண வலுவின்றி திரும்பிக்கொண்டேன். காவலரிடம் பேசிவிட்டு மீண்டும் ஏர்போர்ட் நோக்கி வந்தேன். அங்கிருந்த நண்பன் விஷயம் தெரிவிக்கபட்டுவிட்டதாகவும் , அநேகமாக துபாயில் இருந்தே அவனை வேறு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைப்பார்கள் என்றான் . விமானநிலையத்தில் காத்திருந்தேன். வசந்த் வரும் விமானம் தரையிறங்கியது. எனக்குள் பயம் அதிகரித்தது. வசந்தை எப்படி எதிர்கொள்ளபோகிறேன் என்ற கேள்வி . சோதனைகள் அனைத்தும் முடிந்து வெளியே வந்தான் வசந்த். அழுது அழுது வீங்கிய முகம் , கசங்கிய சட்டை , தளர்ந்த நடை. அவன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு என் அருகே வந்தான்." நீ பாத்தியா? " என்றான் . " ஹ்ம்ம் !" என்றேன் கண்ணீரோடு . " கண்டிப்பா அவதானாடா? " என்று மீண்டும் கேட்டான் . "ஹ்ம்ம்!" என்றேன் . அவனது ஒவ்வொரு கேள்வியும் என்னை துளைத்தது. என்னைக் கட்டிக்கொண்டு "என் லைப் முடிஞ்சு போச்சிடா " என்று கதறி அழுதான்.ஆறுதல் கூற இயலாதவனாய் அவனைக் கட்டிக்கொண்டு நண்பனின் அறைக்குக் கொண்டு சென்றேன் . வசந்த் அழுதுகொண்டே இருந்தான் . அவரிகளின் காதலை நேரில் கண்டதால் அவளின் இறப்பு அது வசந்திடம் உண்டாகிய தாக்கம் எவ்வளவு என்பதை என்னால் உணர முடிந்தது.
4 மாதங்கள் கடந்தன. வசந்த் முன்பைப் போல் கலகலவென பேசுவதில்லை . சென்னையில் அம்மாவோடு தங்கி இருந்தான். சிலநேரங்களில் வசந்த் அம்மா என்னிடம் " பிரவின் ! இவன் இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்ட இருக்குபா !! அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறனான்னு நீ தான்பா கேட்டு சொல்லணும் " என்பார். நானும் அடிக்கடி சொல்வேன் . அவன் அதனை கண்டுகொள்வதாய் இல்லை. அப்போது தான் வசந்திற்கு 1 வருட onsite வாய்ப்பு வந்தது . வருணாவை மறக்க முடியாமல் தவிக்கும் வசந்திற்கு ஒரு மாற்றம் தேவையை இருந்தது . சரியான நேரத்தில் வந்ததால் அவனை வற்புறுத்தி சம்மதிக்கவைதேன் .
நானும் , வசந்தின் அம்மாவும் ஏர்போர்ட்க்கு சென்றோம் அவனை வழியனுப்ப. அமைதியாய் இருந்தான். வசந்த் தனது அம்மாவை நோக்கி " நல்ல சாப்பிடுமா! ரெஸ்ட் எடு ! எதாவது வேணும்னா பிரவின்கிட்ட சொல்லு " என்றான். சிறிது யோசித்தவனாய் " மச்சி ! என் லைப் கடைசில பாம்பு அட்டை கேம் மாதிரி ரொம்ப வேகமா ஏணில ஏறி , ரொம்ப வேகமா பாம்பு கொத்தி கீழே வந்த மாதிரி இருக்குல்ல " என்று சொல்லி சிரித்தான். எனக்கு அவ்வார்த்தை மிகுந்த வேதனை உண்டாக்கியது. " அப்படிலா ஒண்ணும்மில்லடா! சரி நீ கிளம்பு " என்றேன். வசந்தின் அம்மா என்னிடம் செய்கை செய்ய " டேய் வசந்த் ! " என்று அழைத்தேன்." என்னடா !" என்றான் . "Marriage பண்றதுபற்றி கொஞ்சம் யோசி சரியா !!" என்று வார்த்தையை விழுங்கினேன். என்னை சிறிது உற்றுநோக்கி "Its a Holy Shit டா" என்று கூறிக்கொண்டே Immigration சோதனைச்சாவடிக்குள் சென்றான். அதுவே அவன் என்னிடம் நேரில் சொன்ன கடைசிவார்த்தை. இப்பொழுதும் வாரத்திற்கு இரண்டு முறை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன். அதில் அவனது கல்யாணம் பற்றி மீண்டும் மீண்டும் அவனுக்கு எழுதுகிறேன் என்றாவது ஒருநாள் அவன் ஒத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் . Download As PDF