Sunday, September 5, 2010

நானும் !! நானும் !!

தண்ணீர் குழாய் குமுறுகிறது. "காசநோய் " கண்டிப்பாக இக்குழாயிக்குக் காசநோய் தான். பூமித் தாயின் குருதியினை முடிந்தமட்டும் உறிஞ்சி என் கைகளில் பீச்சியடிக்கிறது. குழாய் நீர் விரயமாகிக்கொண்டிருகிறது. காலைச் சூரியனின் ஓளி ஜன்னல் வழியாக என் நெற்றியினை பதம்பார்கிறது.அரைத் தூக்கத்தில் பல்துலக்கியை தேடி எனது விரல்கள் ஜன்னலில் விளையாடுகின்றன. கண்டுபிடித்த களிப்பில் மறுகை பற்பசையை அழுத்த , அது துலக்கியின் தூரிகையின் மீது பிரமாதமாய்ப் படுத்துக்கொண்டு எனது பல் சிறைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. என் மூளைக்கு இச்செயல்களில் எள்ளளவும் ஈடுபாடு இல்லை. இன்று மதியம் நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி மும்மரமாய் எண்ணிக்கொண்டிருந்தது .
"டேய் ! தண்ணீய வீணாக்காதடா !" என்றொரு அறிவுரை என் அருகிலிருந்து. நான் சிறிதும் சலனமற்றவானாய் பல் துலக்குதலில் குறியாய் இருந்தேன். மதியம் நடக்கப்போகும் அந்நிகழ்ச்சி என்னுள் சிறு பதற்றத்தை பற்றவைக்க , அது கைகளில் வாயிலாய் துலக்கியை அடைந்து, அவ்வேகமான துலக்குதலினால் எனது கீழ்த்தாடையின் முன்னிலிருந்து இடப்பக்கம் மூன்றாவது பல்லின் கீழுள்ள எளிரை பதம்பார்த்தது. வலி பொறுக்கமுடியாமல் தண்ணீரை அள்ளி அள்ளி வாயில் நிறைத்தேன். நிறமற்ற நீர் வெளிவரும்போது நீர்ம சிவப்பினை பெற்று சிதறி ஓடியது. "மெல்ல பல்தேய்டா ! எதுக்கு இப்போ பதற்றபடுற ? ஒரு வருஷமா இன்னைக்கு இன்னைக்கு நடக்கும்னு நெனச்சிக்கிட்டு இருந்த ஒரு விஷயம் இன்னைக்கு நடக்கப்போகுது. இதுக்கு தைரியமா இருக்கணுமே தவிர தயக்கமோ , பயமோ தேவையில்லை" என்ற அறிவுரை மீண்டும் பாரபட்சமில்லாமல் பாய்ந்தது. அதனையும் பொருட்படுத்தவில்லை. பொதுவாக அறிவுரை கூறுபவர்கள் மற்றவரின் பதற்றத்தையும் , பயத்தையும் முழுமையாக உணர்வதில்லை. கடலின் நடவே சிக்கியவனுக்கு கரையில் நிற்பவன் நீந்தக் கற்றுக்கொடுக்க இயலாது. எனது வாழ்நாளின் பெருவாரியான நாட்களை தனிமையின் துணையுடன் கழித்தவன்.

பள்ளி ,கல்லூரி நாட்களில் அனைவருக்கும் நண்பர்கள் வட்டம் இருந்திருக்கும். எனக்கு அமைந்த வட்டத்தின் விட்டமோ ஒரு சுழியம். அது ஒரு புள்ளி . சிறு புள்ளி. யாருடனும் பேசி,சிரித்து பழகியதில்லை. இதனாலேயே எனக்கு வாய்த்தது அந்த பெண்ணின் நட்பு. அனாவசியாமாக சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களுக்கு மத்தியில் , அவளுக்கேன்னவோ அளவுக்குக் கூடபேசாத என்னைப் பிடித்திருந்தது என்றாள். இரண்டு வருட நட்புக்காலம். முதல் வருட முடிவிலேயே எனது முடிவு மாறியிருந்தது . காதல் மலர்ந்திருந்தது. அவளுடனே வாழ்நாள் முழுவதும் வாழவேண்டும் என்ற உந்துதல் என்னுள் ஆழமாக வளர ஆரம்பித்தது. ஒரு வருட காலம் நான் நினைத்து நினைத்து சேர்த்த எண்ணக் குவியல் இன்று மதியம் அவள் முன் உடைக்கப்பட போகிறது . இத்தனை எண்ணங்கள் மனதில் ஓடி முடித்திருந்த தருவாயில் நான் குளித்து முடித்திருந்தேன். "டேய் ! சட்டையை அயன் பண்ணி போடலையா ? எவளோ சுருக்கம் இருக்கு பாரு " என்றொரு அதட்டல். சட்டை சுருக்கங்கள் எப்பவுமே எனக்கு ஒரு அரவணைப்பை கொடுப்பதை உணர்வதால் அதனை ஒரு இரும்புத் தேய்ப்பின் மூலம் இழக்க விரும்பாதவன் நான், அதனால் அதட்டலை அலட்சியம் செய்தேன். ஆடையை அணிந்து கொண்டேன்.

கண்ணாடி முன்னிற்க்கையில் ஒரு வார தாடி என்னை ஓரக்கண்ணால் பார்த்து "கவனிப்பாயா?" என்றவாறு தொக்கிநின்றது. அதனையும் நான் சட்டைசெய்வதாய் இல்லை . " ஒரே எண்ணம் ! ஒரே வாக்கியம் ! ஒரே முடிவு !" இன்று தெரிந்தாகவேண்டும் . ஆனால் இதே போன்று இதற்குமுன் தன்னிடம் வந்து காதலைச் சொன்ன ஒரு ஆணைத் தாறுமாறாக திட்டியதாகவும் , அவனும் நண்பன் என்ற பதவியில் இருந்து , காதலன் என்ற பதவிக்கு ஆசைப்பட்டதாகவும் , அந்த விஷயம் கல்லூரி முதல்வர் வரை போனதாகவும் கூறியிருக்கிறாள். அதே ஆசையுடன் நானும் செல்கிறேன். கண்டிப்பாக எதிர்மறை தான் பதில். தெளிவாகத் தெரிந்தும் அச்செயலை செய்யத் துணிந்தேன். வீட்டினில் மின்விசிறி சுழலும் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது . மற்றவை அனைத்தும் நிசப்தம் என் எண்ணங்கள் உட்பட.எனது கால்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல தயங்கின. "வேண்டாம்" என்பது தான் அவளுடைய பதிலாக இருக்கப்போகிறது. அறை விழாமல் திரும்பினால் அது எனது அம்மையப்பன் செய்த புண்ணியம் தான்" என்று எனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தேன் . "டேய் ! தைரியமா போவோம்.நானும் இருக்கிறேன்ல ! கண்டிப்பா அவ ஒத்துக்கொள்வா" என்ற ஆறுதல் வார்த்தை எனக்கு சிறிது மகிழ்ச்சி அளித்தது. வீட்டைவிட்டு வெளியேறினோம்.
பாடவேளைகள் கடந்து கொண்டிருந்தன. நான் பாடங்களை விட்டு வெகுதொலைவில் எண்ணச்சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன். மதிய உணவு இடைவேளையின் போது எப்படியாவது இதை கொடுத்து விடவேண்டியது தான் . இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு என்னிடம் இருந்த அவளுடைய ஒரு புத்தகத்தில் நான் வைத்திருந்த நானே தயார்செய்த வாழ்த்து அட்டையை எடுத்துப் பார்த்தேன் . அது ஒரு வெள்ளைத் தாள் . அதில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது ஒற்றை வாக்கியம். இரண்டே வார்த்தைகள். எனது வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய அந்த இரண்டு வார்த்தைகள்: "உன்னை காதலிக்கிறேன். ". இந்த இரண்டாம் "கா" வார்த்தையை முழுசாக எழுதிமுடித்து முற்றுப் புள்ளி வைக்க எனக்கு சரியாக 13 நிமிடங்கள் ஆகிற்று. யோசனை ... மீண்டும் பலத்த யோசனை. எந்திர மணி ஒலித்து எனது சிந்தனை சிறையினை உடைத்து என்னை தற்காலத்திற்கு இழுத்து வந்தது. மதிய உணவு வேளை. நேரம் கூடிவந்து விட்டது. கொடுத்துவிட வேண்டியது தான்.

போலி தைரியத்தை முழுமையாக மூளையில் ஏற்றிக்கொண்டு நடந்தோம். கல்லூரியின் உணவருந்தும் அறையில் அவள் தனது சகாக்களுடன் உணவு உண்டுகொண்டிருந்தாள். அவர்களின் அருகில் சென்று அழைக்க சற்று கூச்சமாய் இருந்தது . நின்ற இடத்தில இருந்து அவளை நோக்கி செய்கை செய்து " ஒரு நிமிடம் " என்றேன். அவளும் தனது ஸ்பூனினை வைத்து விட்டு வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வெளியே ஒரு மரத்தினடியில் சென்றேன். " என்ன விஷயம்டா ? ரொம்ப டல்லா இருக்கிற ? " என்றாள். எனக்கோ அவள் முகம் பார்த்து பேசுவது முடியாத காரியமானது. கீழே தலைகுனிந்து தரையை பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தேன். அவள் ஏதேதோ சொல்லிகொண்டிருந்தாள். " டேய் ! அவ உன் கிட்ட பேசிகிட்டே இருக்கிறா .. கொஞ்சமாவது respond பண்ணு ! என்றது குரல். நானோ உழைத்துப் பெற்ற உணவினை சுமந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்த ஒரு எறும்பினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ எண்ணம் திடீரென்று உந்தித்தள்ள , சற்றென்று அவள் கண்களை நோக்கினேன். " குடு டா ! கையில வச்சிருகிறத குடுத்திரு டா ...! தாமதிக்காதே ! " அவரசரப்படுத்தியது குரல். "மன்னித்துவிடு நான் செய்யுறது தப்புன்னு நெனச்சனா ?" என்று கூறிவிட்டு அவளிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வேகமாய்த் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.

கண்டிப்பாக இந்த பித்தனின் பேச்சும் , செய்கைகளும் அவளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கக் கூடும். புத்தகத்தினுள் திறந்து பார்த்தால், அது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்துமேயானால்......! என்னால் அதன்பிறகு நடக்கபோவதை நினைத்துகூடபார்க்கமுடியாது. " பண்ணனும்னு நெனச்சத பண்ணியாச்சி ! விடு பாத்துக்குவோம் " என்றது குரல். எதுவுமே புரியவில்லை. யார் பேச்சையும் கேட்கத் தயாரில்லை. மதியம் வகுப்பில் அவளை எதிர்கொள்ள எனக்கு துணிவில்லை. விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றேன். காலையும், மதியமும் உண்ணாத காரணத்தால் கடும் தலைவலி. வெளியே சென்று நன்றாக உண்டுவிட்டு ஒரு ஆழ்ந்த தூக்கம் போட்டால் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டு , உணவருந்தி படுத்தால் மீண்டும் படபடப்பு என்னை வாட்டியது. தூக்கத்தை இழந்து, குழப்பங்களை மட்டுமே எனது எண்ணங்கள் சுமந்து கொண்டிருந்தது. சில மணிநேரம் கழித்து என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை. எப்போதும் கடைசியாக வகுப்பிற்கு செல்லும் நான் , இன்று முதலில் சென்று மூன்றாம் பெஞ்சினை ஆக்கிரமித்துக் கொண்டேன். பதற்றம் ஆழ்ந்த பதற்றம் என்னை ஆட்கொண்டது. லாட்டரியை ஆர்வமாக சுரண்டுபவனின் பதற்றம். தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் பதற்றம். அதுவும் காதல் தேர்வு. ஒவ்வொரு மாணவர்களாக வகுப்பை மெல்ல மெல்ல நிறைத்தார்கள் . அவளைத் தவிர. அவள் வராதது எனது இதயத் துடிப்பை எகிறச் செய்தது. தப்பு செய்துவிட்டேனோ ? எதற்காக அவள் வரவில்லை ? காரணம் நானா ? நான் கொடுத்த கடிதமா ? அவளது விடுப்பு எனது தோல்வியை உறுதி செய்தது. இம்முறை என் அருகே ஆறுதல் குரலும் இல்லை . அதுவும் சோர்ந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. முதல் இரண்டு பெஞ்சினில் இருக்கும் அவளின் தோழிகள் என்னை மீண்டும் மீண்டும் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். விஷயம் ஊர்ஜிதம். அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் பார்வை என்னை சித்ரவதை செய்தது.முடிந்தமட்டும் அவர்கள் பக்கம் திரும்பாமல் பாடவேளைகளை கடத்தினேன்.

மீண்டும் மதியவேளை. முந்தியடித்துக் கொண்டு வகுப்பின் வெளியே சென்றேன். என்னை அழைத்தது ஒரு பெண்குரல். நின்றது அவளின் தோழி. என்னை அவள் நூலகத்தின் அருகே வரச் சொன்னதாகக் கூறிவிட்டுச் சென்றாள். நூலகத்தை நோக்கி ஓடினேன். "டேய் ! மெதுவா போ " என்றது குரல். இதனையும் நான் பொருட்படுத்தாது ஓடினேன். நல்லதோ ? கெட்டதோ? ஏதோ ஒரு முடிவு தெரிந்தாகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஓடினேன். அங்கே அவள் நிற்பதைக் கண்டதும் எனது ஓட்டம் நடையானது. அருகில் சென்று "சாரி ! அவசரப்பட்டு" என்று பேச ஆரம்பித்தேன். அவள் "நிறுத்து " என்றவாறு சைகை காட்டினாள். நேற்று நான் கொடுத்த அதே புத்தகத்தை என் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். எனது மனதின் நடுக்கம் கைகளில் தெரிந்தது. "திறந்து பாரு ! பாரு டா! " உந்தித் தள்ளியது குரல். எனக்கு மனதில் வலுவில்லை. திறந்தேன் மெதுவாக . நான் கொடுத்த அதே காகிதம்.

அவள் முடிவினை சொல்லிவிட்டாள். எதிர்பார்த்த எதிர்மறை பதிலை அவளின் செயல்களின் மூலம் கூறிவிட்டாள். கண்களில் நீர் வெளிவர தயாரானது. மனமுடைந்து மறுபடியும் திறந்து காகிதைப் பார்த்தேன். நான் எழுதிய இரண்டு வார்த்தைகளுடன் கீழ ஓரத்தில் ஒரு அம்புக்குறி. சிறிது உற்சாகம். காகிதத்தை திருப்பிபார்தேன் அதில் "நானும்" என்ற ஒற்றை வார்த்தை. பார்த்ததும் பரவசம். மகிழ்ச்சியின் உச்சம். கனவா ? நனவா? அரை நொடிக்குள் ஆயிரம் கேள்விகள். இப்படியும் கூட எனக்கு நடக்குமா?. ஒற்றை வார்த்தையில் நான் எழுதிய இரண்டு வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தாள். "எப்படி டா நான் சொன்னது நடந்துச்சா?" என்று சொன்னது குரல். "தேங்க்ஸ்! " என்றேன் .மனநிறைவுடன் வீடுதிரும்பினேன். அன்றிரவு நிம்மதியாக உண்டேன். பலநாள் பதுக்கிவைத்திருந்த தூக்கம் இன்று விடுதலையடைகிறது. "என்னடா ! தம்பி ! கடைசில சந்தோசமா " என்றது மனசாட்சியின் குரல். "ஆமா! நல்ல வேளை நான் நெனச்சது நடக்கவில்லை" என்று மகிழ்ந்தேன். "சில நேரம் நீ நெனகாதது நடக்கிறதும் நல்லதுக்கு தான் . உனக்கு ஒரு துணை கிடைச்சிருச்சி . இனி நீ தனியானவன் இல்ல !" என்றது மனசாட்சி களிப்புடன்.

இங்கு எனக்கு ஒரு ஐயம். நான் நினைத்தது நடக்கவில்லை ! மனசாட்சி சொன்னது நடந்தது ! இந்த தருணத்தில் நானும் என் மனசாட்சியும் வேறு வேறா? " என்ற தர்க்கம் என்னுள். கடும் யோசனைக்கிப்பின் இரண்டும் ஒன்றாக இருந்தாலும் , வேறுவேறாக இருந்தாலும் நானும்,நானும் (மனசாட்சியும்) இருக்கும்வரை என்றுமே நான் தனியானவனில்லை என்பதை உணர்ந்தேன் . ஆழ்ந்த தூக்கத்தோடு ஐக்கியமானேன். Download As PDF