Wednesday, July 13, 2011

ஆல் அழித்த ஆனை!

                 "ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய வெரட்டுசாம்" என்பது தமிழ் கொள்ளுப்பாட்டியின்  அனுபவமொழி. பாட்டியாகத்தான் இருக்கமுடியும்.  பழமொழிகளுக்குப் பெரும்பாலும் உபயத்தகவல் இருப்பதில்லை. பிடாரிகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. மூர்க்கமாய் , குருதி கொப்பளிக்கத் தாக்கிக்  கொள்கின்றன.கடைசிக் காற்றினை சுவாசித்துப் பூவுலகம் நீங்குமட்டும் காத்திருந்து அடுத்தவரின் சாவைக் காணத் தன் உயிரினைப் பிடித்துக்கொண்டு, வேட்டையாடும் வல்லூரினைப் போன்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 

                                       "எப்பா ! கால் ரொம்ப வலிக்கி " என்று கூவிக் கொண்டே நொண்டி நொண்டி தந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தான் ராசு. "மண்ணாங்கட்டி ! சொன்ன கேக்கயால ? எங்கயாவது போயி மேலயும், கீழயும் கொரங்கு மாதிரி குத்திக்க வேண்டியது, அப்புறம் வந்து அங்க வலிக்கி, இங்க வலிக்கின்னு அழ வேண்டியது. பேசாம வா !" என்று வாய்முழுக்க வசையும், கையில்  காயத்திருமேனி எண்ணெய் டப்பாவுடன் மரக்கடை நோக்கிச் சென்றார் ராசுவின் தந்தை. மரக்கடையை அடைந்ததும் கடைமுதலாளி கடையில் இல்லாததை அறிந்து சுற்றும், முற்றும் பார்த்தார். தூரத்தில் ஆலமரத்தின் அடியில் முதலாளி அமர்ந்து ஓய்வெடுப்பது தெரிந்தது. ராசுவை நோக்கி "டே ! மரத்துக்கு கீழ மாமா இருக்காரு ! அங்க வா என்னா !" என்று கூறி வேகமாய் நடந்தார் தந்தை.
                                அடிபட்ட காலுடன் இன்னும் சிறிது தூரம் நடக்கவேண்டும் என்ற கடுப்புடன் மனதுள் குமுறிக்கொண்டே நடந்தான் ராசு. "என்னப்பா ! பைய ஏதோ நொண்றான் என்ன பொதையல் எடுத்தான்? " என்றார் முதலாளி சிரித்துக்கொண்டே. "இல்ல மாமா ! வழக்கம் போல தான். பயலுக்கு கால் கரண்டையில அடி விழுந்துருக்கும்னு நெனைக்கேன் ! ஒரு உருவு உருவி விட்டேகன்னா சரியாயிடும்" என்றார் தந்தை. "என்னடே மக்கா ! நொண்டுக தோரணையை பாத்த அடி பலம் போல இருக்கேடே ?" என்றார் ராசுவிடம். அவன் ஏதும் கூறாமல் நொண்டியவாறே நின்றான். முகம் சிறிது அஷ்ட கோணல். இதற்கு முன் பலமுறை அவரிடம் சுளுக்கெடுக்க வந்துள்ளான். அவரது கரவித்தையில் சுளுக்கு போகிறதோ இல்லையோ ஒரு வினாடி உயிர் போய் மீண்டு வரும். "இப்புடி திண்டுல படுடே!" என்று கூறி, தந்தையிடம் காயத்திருமேனி எண்ணெயை வாங்கினார். ராசுவின் கால் கரண்டையை மென்மையாய் தடவினார். ராசுவிற்கு இத்தடவலின் நோக்கம் தெரியும். புயலுக்கு பின் மட்டுமல்ல , முன்னும் அமைதிதான். அடிபட்ட இடத்தை கண்டு கொண்ட பின் மெதுவாய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளிலும் குளிர தடவி கரண்டையில் தொடங்கியது சுளுக்கு வேட்டை. "ஞ ! ங் !" என்று மெல்லினத்தில் முனங்கிக் கொண்டிருந்தான் ராசு. வலி கொஞ்ச கொஞ்சமாய் ஏறிக்கொண்டிருந்தது. முதலாளி  வேட்டையில் முன்னேறிக் கொண்டிருப்பதின் அறிகுறி. "அப்புறம் ! அந்த நில காரியம் என்னாச்சி !" என்று வினவார் முதலாளி. "அது என்ன மாமா ! ஓவரா வெல சொல்லுகான். கொஞ்ச கூட கொறைக்க மாட்டக்கான் !! ரொம்ப சொல்லிப் பாத்தேன். பிடிச்ச பிடியிலயே நின்னான்! போல மயிராண்டின்னு வந்துட்டேன் " என்று தந்தை சொல்லிமுடிக்கும் முன்னர் ராசுவின் கரண்டையை முதலாளி ஒரு உருவு உருவினார். "ஆ !" எனக் கதறினான் ராசு " அவளோ தானடே ! போட்டு ! போட்டு ! செரியாயுடும்" என்று இருதுளி எண்ணையினை குளிர தேய்த்தார். ராசுவுக்கு கண்களில் இரு துளி கண்ணீர் பிதுங்கிக் கொண்டு வந்தது. " அப்படியே படுடே கொஞ்ச நேரம் " என்று கூற முதலாளியும் , தந்தையும் உரையாடலைத் தொடர்ந்தனர்.
                  மீண்டும் புதிதாய் பிறந்ததைப் போன்ற ஓர் எண்ணம் ராசுவுக்கு. கால் சிறிது மரத்துப் போயிற்று. ஆலமரக்காற்று மிகவும் சுகமளித்தது. இலைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினான். பறவைகளின் ஓசையும், இலைகளின் அசைவும், காற்றில் மிதக்கும் விழுதுகளும் , அங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்புநிற பழங்களும் ஏதோ அவன் வலிக்கு ஆறுதல் அளிப்பதாய் உணர்ந்தான். இந்த மரத்தின் கீழே பலநாட்கள் விளையாடியுள்ளான் . இன்று ஏதோ புதிதாய் தோன்றியது.
                               விசாலமான அந்த ஆலமரத்திற்கு சுமார் 60 வயது இருக்கலாம். அப்பகுதியில் குடியேறிய முதல் குடும்பத்திற்கு மூத்தது அம்மரம் .அடை மழையிலும், கொடும் வெயிலிலும் தனித்து நின்று தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பமது.அம்மரம்  சொந்தக்காலில் நிற்கத் தொடங்கிய நாள் முதல் பறவைகளின் வாசம் அங்குண்டு. 
                            பலவகை பறவைகளின் பல தலைமுறைகளை கண்டது அம்மரம். அதன் பலனாய் அப்பறவைகள் அம்மரத்தின் பழத்தினை உண்டு விதைகளை வேறெங்காவது விதைத்திருக்கலாம் வாய்ப்பிருகிறது. அதன் மூலம் ஆலமரத்திற்கு அக்கம்பக்கத்தில் சொந்த, பந்தங்கள் இருக்கலாம்.
                                 காலம் வேகமாய் கடந்தன. மரத்தின் அருகில் மக்கள் குடியேற்றம்  அதிகமாயிற்று. பெரும்பாலும் மக்களும், பிற உயிர்களும் ஓய்வெடுக்கும் இடமாய் ஆலமரம் ஆயிற்று. இவ்வாறாக ஒரு நாள் ஒரு மஞ்சனை (சிவப்பு நிற களிபோன்ற பொருள்.சாமி சிலைகளின்மேல் தேய்க்கும் பொருள்) விற்கும் பெண் ஓய்வெடுக்கும் போது மீதமிருந்த மஞ்சனையை ஆலமரத்தில் தேய்த்துவிட்டு போக , அடுத்த நாள் மரத்தின் கீழே பூசை செய்து  கொண்டிருந்தார் ஒருவர் , பூசாரி என்ற பதவியை தனக்கு தானே அளித்துக்கொண்டு காலை மாலை என்று இருவேளைகளும்  தவறாமல் பூசை செய்து வந்தார். பெரிதாய் கூட்டமில்லை என்றாலும் போக, வர அவ்விடத்தை கடந்து செல்பவர்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு சென்றனர். சிலமாதங்கள் சென்றபின், விநாயக சதுர்த்தி நாளன்று ஒரு சிறிய விநாயகரின் சிலையை செய்து மரத்தின் அடியில் வைத்து பூசையை ஆரம்பித்தார். அன்றிலிருந்து கூட்டம் களைகட்டத் தொடங்கியது. பெண்டீர்  கூட்டம் அலைமோதியது. பூ, பழம், சூடம் விற்க சிறு கடையும் வந்துவிட்டது.
                                                     கடந்த ஒரு வாரமாய் ஊருக்குள் ஓர் வதந்தி. உண்மையென்று அறியும் மட்டும் உண்மையும் வதந்திதான். சிறு கோவில் , சிறு பிள்ளையார் மக்களுக்கு போதவில்லைபோலும். பிரமாண்ட பிள்ளையார் வரப்போகிறார் என்ற காட்டுதீ போன்ற வதந்தி. காட்டுத்தீக்கு பொறி கிளப்பியவர்கள் ஊர்பெரியவர்களாகத்தான் இருக்க முடியும். ஊர்பெரியவர்கள் என்றால் மூன்று பணம் படைத்தவர்கள் , அவர்கள் அடிக்கும் கொட்டுக்கு ஆடும் இரண்டு படித்தவர்கள்.  கோவில் காரியம் ! ஆதலால் இந்த கூட்டத்தில் பூசாரியும் சேர்ந்து கொண்டார். கோயில் வளர வளர அவரும் வளர்ந்தார் வாழ்விலும் , வசதியிலும். பெரிய கோவில் என்பதால் பெரிய வளர்ச்சியிருக்கும் என்று நம்பிக்கையில் அவர்  வழக்கத்திற்கு மேலாய் கோவில் கட்டும் திட்டத்தில் சிறப்பாய் செயல்படுவதாகவும் ஓர் வதந்தி.
                    புதன்கிழமை காலை ஊர் கூட்டத்தை கூட்டினர். வதந்தி 50 % உண்மையை நோக்கி பயணப்பட்டிருந்தது. மக்களுக்கு கொஞ்ச அகமகிழ்வுதான். பெரிய கோவில் வீட்டுக்கு பக்கம் வந்த சர்கார் இன்னும் இரண்டு பஸ் அதிகம் விடுவாங்க " என்ற பேச்சும் அடிபட்டது. ஊர் பெரியவர்களில் ஒருவர் தொண்டையை சிறிது செருமிக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார். "இப்போ எதுக்கு கூடி இருக்கோம்னா நம்ம பிள்ளையார் கோவில இடிச்சிட்டு பெருசா காட்டணும்னு பல பேர் ரொம்ப நாலா சொல்லிட்டு இருக்கிறது எல்லாத்துக்கும் தெரியும். அதுக்கு செரியான நேரம் வந்துருச்சின்னு நெனைகிறோம். அதுனால எல்லாரும் முடிஞ்ச நன்கொடையை குடுங்க ! இது நம்மலா எடுத்த முடிவில்ல! பூசாரிக்கு கனவு வந்துருக்கு ! விஷயம் கொண்ட மூணு தோசியர்கிட்ட விசாரிச்சதுல கோவில் பெருசா கட்டணும்னு சொன்னங்க ! அதனால இத சீக்கிரமா முடிக்கணும்." என்று கூறி  மக்களை நோக்கினார். கூட்டத்தில் ராசா தந்தையின் கைப்பற்றி நின்றான். கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி முன்வந்தாள். அரசாங்கத்தின் ஆசிரிய வேலையை பெற போராடிக் கொண்டிருப்பவள். அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது தற்காலிக வேலை. "அய்யா ! கோவில் பெரிசா கட்டுனா நெறைய இடப் பிரச்னை வரும்ணு தோணுது. ஏற்கனவே இந்த சின்ன கோவிலால நெறைய போக்குவரத்து பிரச்னை வருதுன்னு பேப்பர்ல கூட வந்தத பாத்துருப்பீங்கன்னு நெனைகிறேன்" என்று பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். " இந்த பாருமா ரேவதி ! இதெல்லாம் யோசிக்காமலா நாங்க முடிவெடுப்போம். இடபிரச்சனைய மனசுல வச்சிதான் இந்த மரத்த வெட்டிட்டு அதுல கோவில காட்டுவோம் " என்று முகமலர்ந்து கூறினார் படித்த பெரியவர் ஒருவர். மக்களுக்கு சற்று அதிர்ச்சி. இதனை யாரும் கனவில் கூட எண்ணிப்பார்க்கவில்லை. "அய்யா ! மரத்த வெட்டுகது கொஞ்ச கூட செரி இல்ல. இந்த கோவில் இப்படியே இருந்துட்டு போட்டும். இப்படி ஒரு பெரிய மரம் இங்க இருக்கிறது நமக்கு தான் நல்லது" என்றாள் ரேவதி. "அட ! ஊரோட ஒத்து வாழம்மா ! சும்மா நாலு வார்த்த படிச்சிட்டு எதாவது உளற வேண்டியது ! சாமி விஷயமாங்கும் !" என்று மிரட்டினார் அமைதியாக. ஊர் மக்கள் யாரும் வாய் திறக்க வில்லை. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்றிருக்க மௌனம் சம்மதம் என்ற பொதுவான கருத்தை மக்களின் முடிவாக ஏற்று ஒரு ஆலமரத்தைக் கொல்லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                                                   ஆலமரம் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது. கொலைக்கு நாளும், கிழமையும் நேரமும் கூட பார்த்தாயிற்று. என்றாலும் பிள்ளையாருக்கு இத்தீர்மானத்தில் சம்மதமா என்பது ஐயமே !.
                                           வாரங்கள் கடந்தன. ராசு வீட்டிற்குள் ஓடிவந்தான். தந்தை உணவருந்திக் கொண்டிருந்தார். "எப்பா ! கோவில் மரத்த வெட்டுகாங்கப்பா!" என்றான் ராசு   அதிர்ச்சியுடன். தட்டிலே கையை கழுவி விட்டு பதட்டத்தோடு கிளம்பினார் மரத்தினை  நோக்கி. ராசு பின்தொடர்ந்தான். கோடாலியின் அடி விழ, விழ பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறந்து சென்றன மரத்திலிருந்து. ரம்பம் தனது வேலையை செம்மையாய் செய்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் யாவரும் ஏதும் செய்வதிறியாது அமைதியாய் உறைந்து நின்றனர். ஆலமரம் தனது உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கூக்குரல் இட்டுக்கொண்டிருக்கும் பறவைகள் இன்றில்லை. சட்டி உடைந்த பின்  பூனைக்கென்ன வேலை. மரம் வெட்டப்படப் போகிறது என்று முடிவடுத்த அன்றே மரம் செத்து விட்டது. கூடி இருந்தவர்கள் அனைவரும் இன்று செய்வது வெறும் மௌன அஞ்சலியே !
                     நாட்கள் ஓடின. சிறப்பமாய் நின்ற ஆலமரம் சிதைக்கப்பட்டு, பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கோவில் நிறுவப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியோடு கும்பாபிசேகம் கொண்டாடினர். ராசு கோவிலுக்கு சென்றான் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சிலைகளை ரசித்தான். நெற்றியில் இரண்டு கொட்டு, சிறு திருநீர்பட்டை கோவிலுக்கு வெளியே வந்தமர்ந்தான். ஏதோ ஒரு புரியாத வெறுமை ஆட்கொண்டது.
                   சுயம்புவாய் வளர்ந்த ஆலமரத்தால் அங்கே ஆனைமுகத்தான் (பிள்ளையார்) வந்தான். இன்று அவன் வளர்ந்து , சுண்டேலியுடன் நிற்க  அவன் வரக்காரணமாய் இருந்த "ஆல்" அங்கில்லை.
                             கொடும் நெருப்புக்கு  நீர், ஆழிபேரலைக்கு கல்லும் ,மண்ணும்  என்று இயற்கை தோற்பது இயற்கையுடன் மட்டும் தான் என்பதும் இயற்கைதான் போலும்.
                        
Download As PDF