Monday, February 27, 2012

புகைப்பரிட்சை (The Smoke Test)

இடம் : நாகர்கோயில் .
நேரம் : மதியம் 3 . 45
கிழமை : ஞாயிறு .

" லேய் பிரவினு ! இங்க வந்து பாரு கிருஷ்ணர் கழுகு பறக்குது " என்று அழைத்தான் பெருமாள் எனது ஆருயிர் நண்பன். நான் எனது வீட்டில் இருந்து கழுகினைப் பார்க்க வெளியே துள்ளிக் குதித்து ஓடினேன்.

வானத்தில் கிருஷ்ணர் கழுகு தனது நரைத்த முடி கொண்ட தலையினை பூமியை நோக்கி தொங்கவிட்டுக் கொண்டு காற்றில் மிதந்து கொண்டிருந்தது. உடனே நான் "லேய் ! கழுகு என்னதான் பாக்குதுலே " என்று துள்ளினேன்.

"போலே ! அது என்ன தான் பாக்குது , என் பேர் பெருமாளு ! கிருஷ்ணர் சாமியும் , பெருமாள் சாமியும் பிரண்ட். அதனால தான் அது என்ன பாக்குது" என்று கூறி என்னை மடக்கினான். அத்தருணத்தில் "பிரவின்" என்ற பெயரின் மீது சிறிது வெறுப்பு ஏற்பட்டது. "பிரவின் ! இங்க வீட்டுக்குள்ள வா " என்று எனது அம்மா அழைத்தார். " சரிடே ! கழுகு உன்னதான் பாக்குது . நா வீட்டுக்கு போறேன் " என்று ஓடினேன்.

வீட்டிற்குள் எனது அப்பா நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
என் தந்தை . அவரே எனது வாழ்வின் முதல் கதாநாயகன். சிறந்த நகைச்சுவையாளர். எந்த தருணத்திலும் அவர் சோர்வாக இருந்து நான் கண்டதில்லை. இன்னலான வேளைகளில் கூட இன்முகத்தோடு புன்முறுவல் பூப்பார்.

அவரை கதாநாயகனாகவே என்னைக் கற்பனை செய்துபார்க்கச் செய்தது அவருடைய புகைப்பிடிக்கும் பழக்கம். ஆம் ! எனது தந்தை ஒரு செயின் ஸ்மோகர் . சில நேரங்களில் அவருடன் பேசும்போது புகை மண்டலத்திற்கு நடுவில் போதனை செய்யும் புத்தர் போலவே எனக்கு தென்படுவார். அந்த தோரணை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் இடையே உண்டாகும் சச்சரவுகளுக்கு பெரும்பாலும் காரணம் இந்த " வெண் குழல் சுருட்டு " சுருக்கமாக தமிழில் சிகரெட். அன்று சச்சரவு சிறிது வலுத்தது.

" என்னமா ! கூப்டயா?" என்றேன். " ஆமா ! படிக்கலையா? சும்மா வெளியே சுத்திகிட்டு இருக்கே , அடுத்தது 6 ம் கிளாஸ் . நெறைய பாடம் இருக்கும்ல , புக் எடுத்து படி !" என்று அதட்டினார் சிறிது கோபத்துடன். அந்த கோபம் என்மேல் கொண்டதன்று என்பது மட்டும் புரிந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் எனது தந்தை சபரி மலைக்கு சென்று திரும்பியிருந்தார். கடந்த இரண்டு மாதங்கள் அவருடைய கதாநாயகன் முகம் தாடியும், பட்டையுமாய் களையிழந்து இருந்தது. மீண்டும் பழைய பளபளப்புடன் அருமையாக புகைபிடித்துக் கொண்டிருந்தார்.

 " இந்த முறையும் அந்த சபரிமலை ஐயப்பர் உங்களுக்கு அறிவைக் கொடுக்கலையா ? இந்த கருமம் பிடிச்ச சிகரட்ட நிறுத்துங்கன்னு எத்தன வருசமா சொல்லிட்டு இருக்கேன் . ஒரு தடவ கூட காதுல விழலயா ?. ஒவ்வொரு தரம் மலைக்கு போகும்போதும் இனி நிறுத்துருவேன்னு சொல்லவேண்டியது .ஆனா ஒன்னும் நடந்த பாடு இல்ல " என்று எனது தந்தையை வார்த்தையால் வறுத்தெடுத்து கொண்டிருந்தார் அம்மா.

தந்தை ஒன்றும் சொல்லாமல் அவருடைய ஆஸ்தான சிகரட்டான "வில்ஸ்" யை ரசித்து கொண்டிருந்தார். நான் ஒன்றும் புரியாதனாய் தமிழ் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன் . எனது தந்தை என்னிடம் " என்ன பிரவின் ! என்ன படிக்கிறே ?" என்றார். எனது அம்மா அடுப்பாங்கரையில் இருந்து ஒரு கரண்டியோடு வெளியே வந்தார். " அவன் என்ன படிக்கிறான்கிறது அப்புறம் இருக்கட்டும் முதல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க !" என்றார்.

"இப்ப என்ன சொல்லணும்கிற" என்றார் தந்தை. " நீங்க சிகரட்ட நிறுத்தணும்! " என்று அழுத்தமாக சொன்னார் அம்மா. " நிறுத்தணும்னுதா நினைக்கிறேன் ! விட முடியல " என்றார் பாவமாக.

" எனக்கு அதெல்லாம் தெரியாது ! பையன் வளர்ந்துட்டான். இந்த பழக்கம் அவனுக்கு வரதுக்கு நீங்களே காரணம் ஆகிடாதீங்க ! அப்புறம் முக்கியமா உங்க உடம்புக்கும் கேடு , அதனால தயவு செய்து விட்ருங்க " என்றார் அம்மா.

அப்பா எந்த பதிலும் சொல்லாமல் வில்ஸின் விசையில் பரவச நிலைக்கு சென்று கொண்டிருந்தார். " நான் இவளோ சொல்றேன் நீங்க கேக்குற மாதிரி இல்ல ! சரி இன்னைக்கு ஒரு முடிவு எடுத்துருவோம்" என்று கூறிக் கொண்டு அடுப்பாங்கரைக்கு சென்றார் அம்மா.

நான் சிறிது கிளர்சசியடைந்தேன். என்ன நடக்கப் போகிறதோ என்ற புதிருடன் பாடப்புத்தகத்தை மூடிய வண்ணம் கையில் வைத்துக்கொண்டு அடுப்பாங்கரையை நோக்கிகொண்டிருந்தேன். உள்ளேஇருந்து அம்மா வந்தார் . நேராக வந்து தந்தை முன்னே இருந்த டேபிள்லில் 50 ரூபாயை வைத்தார். அந்த 50 ரூபாய் நோட்டு சிறிது பெருங்காய வாசனையை அறை முழுவதும் பரப்பி , அதன் பூர்வீகம் பெருங்காய டப்பா என்பதை உணர்த்தியது. "பிரவினு ! இந்த ரூபாயை எடுத்துக்கோ ! போய் சிகரட் குடி ! உள்ளதுலேயே ரொம்ப விலை கூடின சிகரட் வாங்கி குடி ! அப்படியே எனக்கும் வாங்கிட்டு வா ! எனக்கு உங்க அப்பா குடிக்கிற வில்ஸ் வாங்கிக்கோ ! உனக்கு ஏதோ ஒன்னு இருக்குமே அது பேர் என்ன ?? ஆங்க் ! பனாமா! அது வாங்கிக்கோ ! ரூவாய எடுத்துட்டு போ !" என்றார்.

எனது தந்தை இதனை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. என்றாலும் முகத்தில் எந்த அதிர்ச்சியையும் அவர் காட்டவில்லை. " சுசீலா ! என்ன இதெல்லாம் விளையாட்டு " என்றார் அன்பாக அன்னையை நோக்கி. " இல்ல ! ஒண்ணுல நீங்க சிகரட் குடிகிறத நிறுத்தணும், இல்லாட்டா குடும்பமே சிகரட் குடிச்சிட்டு கும்மாளம் போடணும் . ரெண்டுல ஒண்ணுதான் நடக்கணும்! நீ காச எடுத்துட்டு போ ! வாங்கிட்டு வா " என்று வார்த்தைகளால் என்னை விரட்டினார்.

எனக்கு அவர்களின் சண்டையின் சாரம் சற்றும் புரியவில்லை. எனது சந்தேகமெல்லாம் "அந்த 50 ரூபாயை இப்பொழுது எடுக்கலாமா? கூடாதா?" பதிலேதும் புரியாதவனாய் விழித்துக் கொண்டிருந்தேன். எனது தந்தை வில்ஸினை வேகமாக இழுத்துக் கொண்டிருந்தார். சிறிது பதறினார். அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை மட்டும் உணர்ந்தவனாய் எனது தாயை நோக்கினேன்.

அவர் இரண்டு துளி கண்ணீரோடு அடுப்பாங்கரைக்குச் சென்றார். நான் எனது தந்தையின் அருகில் சென்று 50 ரூபாயை நீட்டி "நீங்களே சிகரட் வாங்கிக்கொங்கப்பா " என்று கொடுத்தேன். அவர் மிகவும் கலவரப்பட்டிருந்தார் என்பதை அவரது கண்கள் உணர்த்தியது.
வலது கையில் வைத்திருந்த வில்ஸினை வீசி எறிந்தார்.

 "சரி வா ! வெளிய கடைக்கு போயிட்டு வருவோம் " என்று என்னை அழைத்துச் சென்றார். போகும் வழியில் தனது பையில் இருந்த சிகரட் பாக்கெட்டினை எடுத்து குப்பைத் தொட்டிக்குள் வீசினார். அதில் இன்னும் இரண்டு சிகரட் மீதமிருந்தது தெரிந்தது. தந்தையை நோக்கினேன். அவர் சிரித்தவாறே என்னை நோக்கிக் கண்சிமிட்டினார். நானும் சிரித்தேன்.

 " பிரவின் உனக்கு என்ன வேணும் ? " என்றார். " எப்பா! எனக்கு ஐயர் கடை கேசரி வேணும் " என்றேன் . அழைத்துச் சென்று வாங்கிக்கொடுத்தார். நன்றாக ஊர் சுத்திவிட்டு வீடு திரும்பினோம் .

அந்த நாள் எனது தந்தை சிகரட் பிடிப்பதை நிறுத்திய நாள். தொடர் புகைப்பாளராக இருந்து திடீரென்று புகைப்பிடிக்கும் பழக்க்கதை நிறுத்தக் காரணமாக இருந்தது எனது அன்னையின் அதிர்ச்சி வைத்தியம். அன்றோடு தந்தையின் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் , தாயின் மனப்புகைச்சலுக்கும் முற்றுப்புள்ளி.

 ஒரு வாரம் கழித்து நான் எனது தந்தையை நோக்கி "எப்பா !! இப்போல நீங்க சிகரட் பிடிக்கமாற்றீங்க ? ரவுண்டு ரவுண்டு புகை விடமாற்றீங்க ? ஏன்பா ?" என்றேன். அவர் கையில் வைத்திருந்த பேனாவினால் செல்லமாக என் தலையில் ஒரு அடி அடித்தார். திரும்பிப் பார்க்க அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தார். ஆகா!! நமக்கு ஒரு தர்ம அடி தயார் ஆகிக்கொண்டிருப்பதை உணர்தேன்.
வெளியே ஒரு குரல் " லேய் பிரவினு ! இங்க வந்து பாரு கிருஷ்ணர் கழுகு பறக்குது " என்று அழைத்தான் பெருமாள். தர்ம அடியில் இருந்து தப்பிக்க வெளியே துள்ளிக் குதித்து ஓடினேன்.
Download As PDF